தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.
|
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019 |
சொற்சுவைத் தேனீ விருதாளர் |
![]() முத்தாலங்குறிச்சி காமராசு தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சியில், பெ. சங்கரசுப்பு - சொர்ணம்மாள் இணையருக்கு 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் நாளில் பிறந்தார். பொன் சிவகாமி என்பவரை வாழ்க்கைத் துணையாகக் கொண்ட இவருக்கு, அபிஷ் விக்னேஷ் எனும் மகனும், ஆனந்த சொர்ண துர்கா எனும் மகளும் இருக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் ஒளிப்பட நிலையம் ஒன்றினை நடத்தி வரும் இவர், வரலாற்றுத் தகவல்களைத் திரட்டி நூலாக்கம் செய்யும் சிறந்த எழுத்தாளரும் கூட. ஒரு நதியைப் பற்றி அதிக நூல் எழுதியவர். தாமிரபரணியைத் தலைப்பாகக் கொண்டு தலைத்தாமிரபரணி, தாமிரபரணிக் கரையினிலே, தவழ்ந்து வரும் தாமிரபரணி, நவீன தாமிரபரணி மகாத்மியம், தரணி போற்றும் பரணி உள்படப் பல நூல்களை எழுதியுள்ளார். உலக நதிகள் வரலாற்றில் க்யூ.ஆர் கோடு வசதியுடன் 144 பகுதியையும் வீடியோ மூலம் பார்க்கும் வசதி கொண்ட நூலை நவீன தாமிரபரணி என்று உருவாக்கியவர். 20 ஜமீன்தார்கள் வரலாற்றைத் தொகுத்து, தென்னாட்டு ஜமீன்தார்கள் என்ற 1000 பக்கம் நூலை எழுதியது. மேற்குத்தொடர்ச்சி மலையில் பொதிகை, அத்ரி, தோரணமலை, குற்றால மலைகள் குறித்து சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை, அத்ரிமலை யாத்திரை, தோரண மலை யாத்திரை என்று பல நூல்கள் எழுதியவர். தமிழ் வளர்க்க பாடுபட்ட சித்தர்கள் அறிஞர்கள் சமாதுகளைத் தேடி அதைப் தினசரி நாளிதழ்களில் தொடராய் எழுதி அருள்தரும் அதிசய சித்தர்கள் என்ற பெயரில் நூல் எழுதியவர். களரி என்பது தமிழர் கலை. தற்போது கேரளா அதை உரிமை கொண்டாடி வருகிறது. இதை மீட்டெடுத்து களரி தமிழர் கலைதான் என நிரூபிக்க உலகக் களரி அடிமுறை கூட்டமைப்பினருடன் இணைந்து நூல் ஒன்றையும் இவர் தற்போது எழுதி வருகிறார். இதில் இவர் மூன்று பாகம் எழுதி முடித்துள்ளார். இதில் முதல் பாகம் களரி அடிமுறை 1 என்ற பெயரில் முழு கலரில் புத்தகமாக வெளியாகி உள்ளது. தாமிரபரணி நதியின் மேல் தீராத பற்று கொண்ட இவர் எழுதிய 57 நூல்களிலும் தாமிரபரணி புகழ் எழுதப்பட்டிருக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மறைந்து போன சுதந்திர போராட்ட தியாகிகள் வரலாற்றைத் திரட்டும் பணியிலும் தற்போது ஈடுபட்டு வருகிறார். 144 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலேயே முதன் முதல் அகழாய்வு நடந்த ஆதிச்சநல்லூரில் வெளிநாட்டவர்கள் சைட் அருங்காட்சியகம் இங்கு அமைக்க வேண்டும் என எழுதி வைத்துச் சென்றனர். ஆனால், பல்வேறு அகழாய்வு இங்கு நடந்தும் அருங்காட்சியம் அமைக்கும் பணி நடைபெறவில்லை. மேலும் 2004 ஆம் ஆண்டு மத்தியத் தொல்லியல் துறை சார்பில் நடந்த அகழாய்வுப் பணியின் அறிக்கை 2017 வரை வெளிவரவில்லை. எனவே, இது குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆதிச்சநல்லூர் அறிக்கையையும், மீண்டும் இங்கு அகழாய்வு நடைபெறவும், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கவும் உத்தரவு பெற்றுத் தந்தவர். மேலும் தூத்துக்குடி மாவட்டம், சிவகளை, கொற்கை மற்றும் தாமிரபரணிக்கரையில் அகழாய்வு மேற்கொள்ள உயர்நீதிமன்றம் மூலம் அரசாணை பெற்றுத் தந்தவர். இந்த வழக்கு மூலம் கர்நாடகாவில் உள்ள 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழகத்திற்கு வர வேண்டும் என உத்தரவு பெற்று தந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், தாமிரபரணி ஆற்றின் மேல் கொண்ட பற்றால், தாமிரபரணியைச் சுத்தப்படுத்தி மரங்கள் நடும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். கடந்த 23 வருடங்களாக தாமிரபரணியில் வைகாசி விசாகம் அன்று பிறந்த நாளைக் கொண்டாடி, தாமிரபரணியைக் காக்கத் தன் நண்பர்களுடன் சேர்ந்து உறுதி மொழித் எடுத்து வந்தார். இவரது பல்வேறு முயற்சிகளுக்குப் பின்பு, தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தாமிரபரணியைச் சுத்தம் செய்யும் பணியைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அமைப்புகள் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கியும், பாராட்டியும் சிறப்பித்திருக்கின்றன. தமிழ்நாடு அரசு இவருக்கு 2020 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது வழங்கிச் சிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்புடைய இவருக்கு தேனித் தமிழ்ச்சங்கமும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து " சொற்சுவைத் தேனீ " எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது. ![]() ![]() ![]() |
© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள் இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது ![]() முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com) (ISSN: 2454-1990) ![]() |