TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேனீ விருதாளர்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

சொற்சுவைத் தேனீ விருதாளர்


முனைவர் பொ. திராவிடமணி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள பரக்கலக்கோட்டை எனும் சிற்றூரில் இரா. பொதியப்பன் - க.வேதவல்லி இணையருக்கு 1973 ஆம் ஆண்டு ஜீன் திங்கள் 11 ஆம் நாள் மகளாகப் பிறந்தார். இவர் சு. சரவணவேலு என்பாரை மணந்தார். இவருக்கு ச. ரக்ஷினிபிரியா எனும் மகள் உண்டு. தமிழ் இலக்கியத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றவர். முதுகலை படித்த போதே பல்கலைக்கழக மானியக்குழு நடத்திய பல்கலைக்கழகப் பேராசிரியருக்கானத் தகுதித் தேர்வில் (UGC/NET) தேர்ச்சி பெற்றவர். 1998 ல் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் நிறைஞருக்காகப் படித்த காலத்தில், நாகப்பட்டினம் இ. ஜி. எஸ். பிள்ளை கலை அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளரகப் பணியில் சேர்ந்த இவர், 2009 –ல் திண்டுக்கல், எம். வி. எம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக அரசுப் பணியில் சேர்ந்தார். தற்போது தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 23 ஆண்டுகள் பணியனுபவமுடைய இவர் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்களுக்கு நெறியாளராகவும் உள்ளார். இவரது நெறியாள்கையின் கீழ் 4 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதிநல்கையுடன் ”சமூகவியல் நோக்கில் தமிழ்ப்பெண் போராளிகள்“ எனும் குறுந்திட்ட ஆய்வை செய்து முடித்துள்ளார்.

கவிதை, கட்டுரை, சிறுகதைகள் எழுதுவதில் மிகுந்த ஈடுபாடு உடைய இவர் காக்கைச் சிறகினிலே, தாமரை, கல்கி, இனிய உதயம், வடக்கு வாசல், திணை (காலாண்டிதழ்) தடம் (மின்னிதழ்) முத்துக்கமலம் (இணைய இதழ்) போன்ற பல்வேறு இதழ்களில் தொடர்ந்து கவிதைகளையும், கட்டுரைகளையும், சிறுகதைகளையும் எழுதி வருகிறார். இதுவரை இவரால் எழுதப்பெற்று 8 திறனாய்வு நூல்களும், 3 கவிதை நூல்களும் வெளிவந்துள்ளன. இவருடைய “எங்கே எனது கிராமம்“ எனும் சிறுகதை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பொதுத்தமிழ் படிக்கும் மாணவர்களுக்கும், “கௌதமருக்காகக் காத்திருக்கிறேன்” எனும் கவிதைத் தொகுப்பு மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் தமிழ் இலக்கியத்தை முதன்மைப்பாடமாகப் படிக்கும் மாணவர்களுக்கும் “தமிழ் இலக்கிய வரலாறு”, “இலக்கியமும் அறிவியலும்” போன்ற நூல்கள் பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்குப் பாடமாகப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்குகளிலும், பயிலரங்குகளிலும், உரையரங்குகளிலும் ஆய்வுக்கட்டுரைகளைப் படைத்தளித்ததோடு மட்டுமல்லாது, கருத்தாளராக இருந்து உரையாற்றியுள்ளார். தொலைக்காட்சி, வானொலியிலும் இலக்கியம் சார்ந்த உரைகளை நிகழ்த்தி வருகின்றார். “குறள்நெறிச் செம்மல் விருது”, “தமிழ்ச் செம்மொழி ஆளுமை விருது”, “அண்ணா விருது”, “சாதனை மகளிர் விருது”, கௌதமருக்காகக் காத்திருக்கிறேன் எனும் கவிதைத் தொகுப்பிற்காக “அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருது” போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். சாகித்திய அகாடமியில் மொழிபெயர்ப்புப் பிரிவில் பரிசுக்குரிய நூல்களைத் தேர்வு செய்யும் தொடக்கநிலை உறுப்பினராக இருந்துள்ளார்.

இத்தகைய சிறப்புடைய இவருக்கு தேனித் தமிழ்ச்சங்கமும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து " சொற்சுவைத் தேனீ " எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

சொற்சுவைத் தேனீ விருது



தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இவருக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘சொற்சுவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றது.


© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)