TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேனீ விருதாளர்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

சொற்சுவைத் தேனீ விருதாளர்


முனைவர் பா. வேலம்மாள்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ப. நீலகண்டன் - வே. பாக்கியலட்சுமி இணையர்களுக்கு மகளாகப் பிறந்த இவர், தென்காசியைச் சேர்ந்த உ. முத்தையா அவர்களை மணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று மகள்கள். மூவருக்கும் திருமணமாகி விட்டது. ஒருவர் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும், இருவர் சென்னையிலும் இருக்கின்றனர். இளங்கலை அறிவியல், முதுகலை தமிழ், முதுகலை இதழியல், முதுகலை யோகா, ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். தென்காசி மாவட்டம், குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் 35 வருடங்கள் கல்விப் பணியாற்றி இருக்கும் இவர், இக்கல்லூரியில் தேசிய மாணவர் படை அதிகாரி, தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர், தேசியத் தர மதிப்பீட்டுக் குழு உறுப்பினர், தமிழ்த்துறைத் தலைவர், முதல்வர் (பொறுப்பு) உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றியிருக்கிறார். தற்போது, கடையநல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரி (முன்பு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி) முதல்வராகப் பணியாற்றி வருகிறார்.

பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினராகப் பணியாற்றி இருக்கும் இவர், தேர்வாளர், முனைவர் பட்டத் தேர்வாளர், ஆய்வியல் நிறைஞர் பட்டத் தேர்வாளர், முதல்வர் தேர்வுக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பணிகளிலும் பங்கேற்றிருக்கிறார். இவரது நெறியாளுகையில் 30 பேர் முனைவர் பட்டங்களையும், 200 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களையும் பெற்றிருக்கின்றனர்.

10 நூல்களை எழுதி இருக்கும் இவர், 500-க்கும் அதிகமான பன்னாட்டு / தேசியக் கருத்தரங்குகளில் பங்கேற்று கட்டுரைகளை அளித்திருப்பதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட இணையக் கருத்தரங்குகளில் உரையாற்றி இருக்கிறார். ஆன்மிகச் சொற்பொழிவாளரான இவர், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளிலும் உரையாற்றி இருக்கிறார். தில்லி, அந்தமான், பெங்களூர், கல்கத்தா, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கங்களில் சிறப்புரையாற்றி இருக்கின்றார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், துபாய், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் உரையாற்றி இருக்கின்றார். தமிழ்நாடு அரசின் ‘தமிழ்ச்செம்மல் விருது’ உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

இத்தகைய சிறப்புடைய இவருக்கு தேனித் தமிழ்ச்சங்கமும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து " சொற்சுவைத் தேனீ " எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

சொற்சுவைத் தேனீ விருது



தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இவருக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘சொற்சுவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றது.


© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)